தேவிமார் அனைவரும் வந்து புலம்புதல் அறுசீர் விருத்தம் 1908. | ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற, தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர, ஊழி திரிவது எனக் கோயில் உலையும் வேலை, மற்று ஒழிந்த மாழை உண்கன் தேவியரும், மயிலின் குழாத்தின் வந்து இரைத்தார். |
ஆழிவேந்தன்பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற - சக்கரவர்த்தியின் மூத்தபட்டத்தரசியாகிய கோசலை அப்படிப்பட்ட வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி அழுதுபுலம்ப; தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர்சோர - அவளுடைய உயிர்த்தோழியாகிய சுமித்ரையாகிய இளைய பட்டத்தரசியும் நிலைகுலைந்து புலம்பி உயிர் தளர;ஊழி திரிவது என - பிரளயகாலத்தில் உலகம் கழல்வது போல; கோயில் உலையும்வேலை -அரண்மனை நிலைதடுமாறுடம் போது ; மற்று -; ஒழிந்த மாழை உண்கண் தேவியரும்- மிகுந்துள்ள அறியாமை கொண்ட மை உண்ட கண்ணையுடைய அறுபதினாயிரம் தேவிமார்களும்; மயிலின்குழாத்தின்- மயிற்கூட்டம் போல; வந்து -; இரைத்தார் -கூச்சலிட்டுப் புலம்பினர். மற்று - பிறிது என்னும் பொருளில் வந்த இடைச்சொல். 69 |