சுமந்திரனால் செய்தி அறிந்து வசிட்டன் வந்து வருந்தல் 1912. | மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப, கோது இல் குணத்துக் கோசலையும் இளைய மாதும் குழைந்து ஏங்க, சோதி மணித் தேர்ச் சுமந்திரன் சென்று, அரசன் தன்மை சொல, வந்த வேத முனிவன், விதி செய்த வினையை நோக்கி விம்முவான். |
மாதரார்கள் அறுபதினாயிரரும் - (தசரதன்) மனைவியராய அறுபதினாயிரம்தேவிமார்களும்; உள்ளம் வலித்து இருப்ப - உடன் கட்டை ஏறுவது என்று மனத்தில் உறுதி செய்துகொண்டு இருக்க; கோது இல் குணத்துக் கோசலையும் இளையமாதும் குழைந்து ஏங்க- குற்றமற்ற குணத்தை உடைய கோசலாதேவியும், சுமித்திராதேவியும் மனம் இளகி வாட;(இந்நிலையில்) சோதி மணித்தேர்ச் சுமந்திரன்சென்று - ஒளியை உடைய மணிகள்கட்டப்பட்ட தேரை உடைய சுமந்திரன் போய்; அரசன் தன்மை சொல - தயரதன் இறப்பைத்தெரிவிக்க; வந்த வேத முனிவன் - அங்கே வந்த வசிட்ட முனிவன்; விதி செய்தவினையை நோக்கி - ஊழ்வினை செய்த செயலை உள்ளத்தாலும் கண்ணாலும் நோக்கி; விம்முவான் - வருந்துவான் ஆனான். அரசன் துடிக்கும் காட்சியைக் காணச் சகியாமல் அப்பால் சென்ற வசிட்டன் சுமந்திரனால்செய்தி அறிந்து வந்து வருந்தினன். 73 |