1913. | வந்த முனிவன், ‘வரம் கொடுத்து மகனை நீத்த வன்கண்மை எந்தை தீர்ந்தான்’ என உள்ளத்து எண்ணி எண்ணி இரங்குவான், உந்து கடலில் பெருங் கலம் ஒன்று உடைய நிற்கத் தனி நாய்கன் நைந்து நீங்கச் செயல் ஓரா மீகாமனைப்போல், நலிவுற்றான். |
வந்த முனிவன் - அங்கே வந்த வசிட்டன்; வரம் கொடுத்து மகனை நீத்தவன்கண்மை - வரத்தைக் கொடுத்து மகனைப் பிரிந்த கொடுமையை; எந்தை -தயரதன்; தீர்ந்தான் - நீங்கினான்; என - என்று; உள்ளத்து -மனத்தில்; எண்ணி எண்ணி இரங்குவான் - நினைத்து நினைத்து மனம்தளர்பவனாய்; உந்து கடலில் - அலை மோதும் கடலில்; பெருங்கலம் ஒன்று உடையாநிற்க - பெரிய கப்பல் ஒன்று உடைந்துவிட; தனி நாய்கன் - தனிப்பட்ட கப்பல்தலைவன் இறந்துபட; செயல் ஓரா மீகாமனைப் போல் - தான் செய்வது இன்னது எனத்தெரியாமல் திகைத்துத் தடுமாறுகின்ற மாலுமியைப்போல; நைவுற்றான் - வருந்தினான். மன்னவன் உடல் மரக்கலம் - மன்னவன் மரக்கலத் தலைவன் - வசிட்டன் மாலுமி என உவமைகொள்க. 74 |