1916. போனார் அவரும், கேகயர்கோன்
     பொன் மா நகரம் புகஎய்த;
ஆனா அறிவின் அருந் தவனும்,
     அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான்;
சேனாபதியின் சுமந்திரனை,
     ‘செயற்பாற்கு உரிய செய்க’ என்றான்;
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு
     விளைந்தது இனி நாம் விளம்புவாம்;

     அவரும் - வசிட்டம் அனுப்பிய தூதுவரும்; கேகயர் கோன் -
கேகயநாட்டரசனது; பொன்மா நகரம் புக எய்த - பொலிவுற்ற பெரிய
நகரத்தைப் போய் அடைய; போனார் - போனார்கள்; ஆனா அறிவின்
அருந்தவனும் -
பேரறிவினனாகியவசிட்டனும்; சேனா பதியின்
சுமந்திரனை -
சேனாபதியருள் ஒருவனாகிய சுமந்திரனை; ‘செயற்பாற்கு
உரிய செய்த’ என்றான்
- இப்போது  செய்தற்குத் தகுந்த செயல்களைச்
செய்து  (நாட்டை உன்னிப்பாகக்) கவனித்துக் கொள்க என்று சொல்லி;
அறம் ஆர் பள்ளிஅது சேர்ந்தான் -  தனது தர்மத்தை நடத்துதற்குப்
பொருந்திய தவச்சாலையை அடைந்தான்;மேல் நாம் சொன்ன
மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம்-
முன்பு இராமனோடு
சென்ற நகரமாந்தர்களுக்கு நடந்ததை இனி நாம் சொல்லத்
தொடங்குகிறோம்.

     அரசன் இல்லாக் காலத்து நாட்டில் கலவரமும், குழப்பமும் விளையக்
கூடும் ஆதலின், அத்தகையநேரங்களில் நாட்டைக் கவனிக்கும் பொறுப்பு
சேனாதிபதிகளுக்குரியது. ஆகவே, வசிட்டனும்சேனாபதியாகிய சமந்திரனை
அழைத்துச் ‘செய்ய வேண்டியவற்றைச் செய்க’ என்றான். அரசியல்
நடந்தவாற்றை இதன்மூலம் அறிந்து மகிழ்கிறோம். மந்திரிமார்கள் பலர் பல
துறையிலும்இருப்பர், அவருள் சேனாபதியரும் அமைச்சரே யாவர்.
சுமந்திரன் என்பது  நல்லமந்திராலோசனையில் உள்ளவன் என்ற பொதுப்
பொருளில் மந்திரியர்க்குள்ள சொல்லாகும்.சென்ற அரசனுக்கும்,  வந்து
சேர வேண்டிய அரசனுக்கும் இடையில் உள்ள காலத்தில் நாட்டைக்
குழப்பத்திலிருந்து  மீட்கும் பொறுப்பு சேனாபதியர்க்கு  உள்ளது.       77