1922.ஆறு செல்லச் செல்ல, தேர் ஆழி
     கண்டார், அயற்பால
வேறு சென்ற நெறி காணார்;
     விம்மாநின்ற உவகையராய்,
மாறி உலகம் வகுத்த நாள்
     வரம்பு கடந்து மண் முழுதும்
ஏறி ஓடுங்கும் எறிகடல்போல்,
     எயில் மா நகரம் எய்தினார்.

     ஆறு செல்லச் செல்ல - வழி நடந்து போகப் போக;  தேர் ஆழி
கண்டார் -
தேர்ச் சக்கரத்தை (சுவட்டை)ப்  பார்த்து;  அயற்பால  வேறு
சென்ற நெறி காணார் -
பக்கத்தில் வேறாகச் சென்ற வழிகள் (சுவடுகள்)
எதுவும் காணாது; விம்மாநின்ற - மேலும்மேலும் தளும்புகின்ற; 
உவகையராய் - மகிழ்ச்சியோடு;  மாறி உலகம் வகுத்த நாள் -பிரளயம்
நீங்கி மீண்டும் படைப்பு நிகழ்ந்த காலத்தில்; வரம்பு கடந்து மண்முழுதும்
ஏறி-
எல்லை கடந்து  பூமி முழுவதும் மூடி மேல் சென்று (பிறகு);
ஒடுங்கும் எறிகடல் போல் -தன் எல்லைக்குள் ஒடுங்கி அடங்குகின்ற
அலைவீசும் கடலைப் போல; எயில் மாநகரம்எய்தினார் - மதிலாற்
சூழப் பெற்ற அயோத்தி என்னும் பெரிய நகரத்தை அடைந்தார்கள்.

     பெருந்திரளாகக் காடு சென்று மீண்டும் நகர் திரும்பிய மக்கள்
வெள்ளத்துக்கு ‘ஏறிஒடுங்கி அடங்கும் கடல்’ உவமையாம். உவமையணி. 83