1924. | மன்னற்கு அல்லார்; வனம் போன மைந்தற்கு அல்லார், வாங்க அரிய இன்னற் சிறையின் இடைப்பட்டார், இருந்தார்; நின்ற அருந் தவனும் ‘உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான்?’ என்று, பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து, பதைப்பை நீக்கினான். |
(மீண்ட நகரினர்),மன்னற்கு அல்லார் - (நகரில் இருந்து) இறந்துபோனதயரதனுக்கும் உதவாமல்; வனம் போன மைந்தற்கு அல்லார் - காடு சென்ற இராமனுடன் கூடச்சென்று அவனுக்கும் உதவாமல்; வாங்க அரிய - நீக்க முடியாத; இன்னல் சிறையின் இடைப்பட்டார் - துன்பமாகிய சிறையிலே அகப்பட்டுத் தவிப்பாராய்; இருந்தார் -; நின்ற அருந்தவனும் - அவர்களிடையேஇருந்த வசிட்டனும்; ‘யான் -; உன்னற்கு அரியபழிக்கு அஞ்சிஅன்றோ ஒழிந்தது என்று - நினைத்தற்கும் அரிய பழி வந்து சேரும் என்றுகருதி அல்லவா நகரில் தங்கியது என்று கூறி; பன்னற்கு அரியபல நெறியும் பகர்ந்து-சொல்லுதற்கு முடியாத பல சமாதானங்களையும் சொல்லி; பதைப்பை நீக்கினான் -அவர்கள் துடிப்பைப்போக்கினான். ‘நகரில் தங்கியது’ என்றும், ‘வனம் போகாது ஒழிந்தது’என்றும், ‘இராமன் காடு செல்வதைத் தடுக்காமல் ஒழிந்தது’ என்றும் பலவாறு பொருள் கொள்ளக்கிடக்கும் எதைச் செய்தாலும் பழியாகும் ஆதலின் அவை அனைத்தும் பொருந்திய உரைகளே. 85 |