1925. | வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத பள்ளக் கடலின், முனி பணியால், பையுள் நகரம் வைகிட, மேல் வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால், வயங்கு இருளின் நள்ளில் போன வரி சிலைக் கை நம்பி செய்கை நடத்துவாம். |
முனி பணியால் - வசிட்டன் கட்டளையால்; வெள்ளத்து இடைவாழ் வட அனலைஅஞ்சி - கடல்நீர்ப் பெருக்கின் இடையே தங்கியுள்ள வடவாக்கினிக்குப் பயந்து; வேலைகடவாத - தன் கரையைக் கடந்து செல்லாத; பள்ளக் கடலின் - ஆழமான கடல் போல; பையுள் நகரம் வைகிட - துன்பமுடைய நகரமாந்தர் ஆற்றித் தங்கியிருக்க; மேல் - அடுத்து; வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் - வள்ளன்மை உடைய தயரதன்ஆணை என்கின்ற தேவர்கள் செய்த தவப்பயனால்; வயங்கு இருளின் நள்ளில் - விளங்கும்நடு இரவில்; போன - காடு சென்ற; வரி சிலைக்கை நம்பி - கட்டமைந்தவில்லை உடைய இராமனது; செய்கை - செயலை; நடத்துவாம் - சொல்லுவோம். தசரதன் பணியாயினும்அது வானோர் தவமே ஆகும். ‘கூனும் சிறிய கோத்தாயும் கொடுமைஇழைப்பக் கோல் துறந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்து’ என்பதும் (1313)காண்க. வடவை - பெண்குதிரை முகம் உடையதாய்க் கடல் நடுவில் இருந்து கடல் நீரைக்கட்டுப்படுத்தும் நெருப்பு. வசிட்டன் வடிவைக்கனல்- கடல் நகரமாந்தர். அடங்கல் - அமைதி அடைதல் என உவமை காண்க. வேலை - கரை. 86 |