1929.மா கந்தமும், மகரந்தமும், அளகம் தரும் மதியின்
பாகம் தரும் நுதலாளொடு, பவளம் தரும் இதழான்,
மேகம் தனி வருகின்றது மின்னொடு என, மிளிர் பூண்
நாகம் தனி வருகின்றது பிடியோடு என, நடவா.

     மா கந்தமும் - மிக்க நறுமணத்தையும்;  மகரந்தமும் - வாசனைப்
பொடியும் கலந்து பொருந்திய; அளகம் - கூந்தல்;  தரும் - பெற்ற;
மதியின் பாகம்தரும்  நுதலாளொடு - அரைச்சந்திரன் வடிவாயமைந்து
நெற்றியை உடைய சீதையோடு; பவளம்தரும் இதழான் - பவளத்துக்குச்
செம்மை தரும் திரு அதரத்தை உடைய இராமன்; மேகம்மின்னொடு தனி
வருகின்றது என்ன -
மேகம் மின்னலோடு சேர்ந்து தனித்து வருகின்றது
போலவும்; மிளிர் பூண் - அழகிய அணி அணிந்த; நாகம் - ஆண்யானை;
பிடியோடு தனி வருகின்றது என்ன - பெண் யானையோடு தனித்து
வருகின்றது போலவும்; நடவா -நடந்து  சென்று.

     நறுமணப் பொடிகளையும் மலர்களில் உள்ள மகரந்தங்களையும்
கூந்தலுக்கு இட்டு மணம் ஊட்டல்வழக்கு. கூந்தலின் கீழ் உள்ள நெற்றியை
‘அளகம் தரும் மதியின் பாகம்’ என்றார். குளகச்செய்யுள்.              4