1931. | ‘அருப்பு ஏந்திய கலசத் துணை, அழுது ஏந்திய மத மா மருப்பு ஏந்திய’ எனல் ஆம் முலை, மழை ஏந்திய குழலாள், கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள்; இடர் காணாள்; பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள், போனாள். |
‘அருப்பு ஏந்திய கலசத்துணை - அரும்பைத் தன் உச்சியில கொண்டுள்ள இரண்டுபொற்கலசங்கள்; அமுது ஏந்திய மதமா ஏந்திய மருப்பு’ - அமுதைத் தன்னிடத்தே வைத்துக்கொண்டுள்ள மதச் செருக்குடைய ஆண் யானையின் உயர்ந்த தந்தங்கள்; எனல் ஆம் முலை- என்று சொல்லத்தக்கதாகிய முலைகளையும்; மழை ஏந்திய குழலாள் - மேகத்தை ஒத்தகூந்தலையும் உடைய சீதை; கருப்பு ஏந்திரம் - கரும்பாலை; முதலாயின கண்டாள் -முதலியவற்றை (அங்கங்கே) கண்டவளாய்; பொருப்பு ஏந்திய தோளானொடு - மலையை ஒத்த திண்ணிய தோளை உடைய இராமனோடு; விளையாடினாள் போனாள் - விளையாடிக்கொண்டுசென்றாள். அரும்பு என்றது முலைக்காம்புகளை. அருப்பு - வலித்தல் விகாரம். எந்திரம் எனும் சொல்செய்யுளிசை நோக்கி ஏந்திரம் என நீண்டது. வழியிடைக் காட்சிகள் கண்டு சீதை வேதனைதெரியாமல் மகிழ்ந்து சென்றாள் என்பதாம். ஏந்திய.....சொற்பொருட் பின்வரு நிலையணி. 6 |