1933. | கால் பாய்வன முது மேதிகள், கதில் மேய்வன, கடைவாய் பால் பாய்வன; நறை பாய்வன மலர்வாய் அளி படரச் சேல் பாய்வன; கயல் பாய்வன; செங் கால் மட அன்னம் போல், பாய் புனல், மடவார் படி நெடு நாடு அவை போனார். |
முது மேதிகள் - கிழட்டு எருமைகள்; கதிர் மேய்வன - நெற்கதிர்களைமேய்ந்து; கடைவாய் பால் பாய்வன - தமது கடை வாயிலிருந்து (மணி பிடியாத அந்நெற்கதிர்களின் அரிசிப்) பால் ஒழுகப் பெற்றவையாய்; கால் பாய்வன - தமது கால்களால்(நீர்நிலைகளிற்) பாய்வனவாம்; நறைபாய்வன மலர்வாய் அளிபடர - தேன் ஒழுகப் பெற்றனவாய மலர்களிடத்து வண்டுகள் மேல் செல்லும்படி; சேல்பாய்வன கயல் பாய்வன -சேலும் கயலும் துள்ளிப் பாய்வனவாம்; பாய் புனல் - பாய்ந்து செல்லும் ஆற்றுநீரிலே; செங்கால் மட அன்னம் போல் - சிவந்த காலை உடைய பெண் அன்னப் பறவைகள்போல; மடவார் - பெண்கள்; படி - முழுகுகின்ற; நெடு நாடு அவை போனார் -நீண்ட கோசல தேசத்தைக் கடந்து சென்றார்கள். கோசல நாட்டின் நீர்வளம் குறித்ததாம். நெற்கதிர் முற்றாப் பசுங்கதிர் ஆதலின், அதனை உண்ட மேதிகளின் வாயில் பால் சோர்ந்தது. அத்துடன் அம்மேதிகள் நீர்நிலைகளிற்பாய்கின்றன. வண்டுகள் மேல் எழுந்து செல்லும்படி மலர்களின் மேல் கயலும் மீனும் துள்ளுவன.அன்னப் பறவைகள் போல் பெண்கள் நீரி்ல் மூழ்குகிறார்கள் என்று கோசல நாடு நீர்வளத்தால்மிக்குள்ளமையைப் புலப்படுத்தினார் என்க. 8 |