மூவரும் கங்கைக் கரை அடைய முனிவர்கள் காண வருதல் கலிவிருத்தம் 1934. | பருதி பற்றிய பல் கலன் முற்றினர், மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ. சுருதி கற்று உயர் தோமிலர் சுற்றுறும் விரி திரைப் புனல் கங்கையை மேவினார். |
பருதி பற்றிய - சூரியனைப் போன்ற ஒளிபடைத்த; பல்கலன் - பல அணிகலன்களை; முற்றினர் - நிறைய அணிந்துள்ள மூவரும்; மருத வைப்பின் - வயல்நிலங்களாகிய செல்வமுடைய; வளம் கெழு நாடு ஒரீஇ - வளம் பொருந்திய நாடு கடந்து சென்று; சுருதி கற்று உயர் - வேதங்களை (இடையறாது) கற்று உயர்ந்த; தோம் இலர்- குற்றம் இல்லாத முனிவரர்; சுற்றுறும் - எப்பொழுதும் சுற்றி இருக்கப் பெற்ற; விரி திரைப்புனல் கங்கையை - விரிந்த அலைகளையுடைய நீர் நிரம்பிய கங்கையாற்றை; மேவினார் - அடைந்தார். தாம் செய்ய வேண்டிய விரத நியமங்களைச் செய்துகொண்டு, இணையாகத் தங்குதற்கு ஏற்றஇடம் ஆதலாலும், தன்னை அடைந்தாரது பாவத்தைப் போக்குதலானும் முனிவரர் கங்கையைச் சுற்றித்தங்கித் தவம் செய்வாராயினர். 9 |