1935. | கங்கை என்னும் கடவுள் திரு நதி தங்கி வைகும் தபோதனர் யாவரும், ‘எங்கள் செல் கதி வந்தது’ என்று ஏமுறா, அம் கண் நாயகற் காண, வந்து அண்மினார். |
கங்கை என்னும் கடவுள் திருநதி - கங்கை என்று சொல்லப்படும் தெய்வத்தன்மைஉடைய அழகிய ஆற்றின் கரையில்; தங்கி வைகும் தபோதனர் யாவரும் - தங்கிஇருக்கின்ற முனிவர்கள் எல்லாரும்; ‘எங்கள் செல் கதி வந்தது’ என்று ஏமுறா - எங்கள்மோட்ச மாகிய செல்லும் பேறு எதிர்ப்பட்டது என்று மனத்தின்கண் இன்பம் அடைந்து; அம்கண் நாயகன் காண- அருளுடைய கண்களை உடைய இராமனைக் காண்பதற்கு; வந்து அண்மினார் -வந்து அணுகினார்கள். பரம்பொருளே இராமனாக அவதரித்துள்ளமை உணர்ந்தவர் ஆதலின், ‘எங்கள் செல்கதி வந்தது’என்று முனிவரர் இன்புற்றனர் என்க. கண்ணுக்கு அழகு, அருளாதலின் ‘அம்’- அழகு எனப்பொருள்கொண்டது. 10 |