1936.பெண்ணின் நோக்கும் சுவையை, பிறர் பிறர்க்கு
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை,
பண்ணின் நோக்கும் பரா அமுதை, பசுங்
கண்ணின் நோக்கினர், உள்ளம் களிக்கின்றார்.

     பெண்ணின் நோக்கும் சுவையை - பெண்ணிடத்துக் கருதப்படும்
ஐம்புல இன்பத்தை; பிறர் பிறர்க்கு - ஒருவர் மற்றொருவர்க்கு; எண்ணி -
நினைத்து; நோக்கி -பார்த்து; இயம்ப அரும்  எடுத்துச் சொல்லமுடியாத;
இன்பத்தை  - இன்பச்சுவையை; பண்ணில் நோக்கும் பராவமுதை -
இசைவடிவான வேதத்தினால் அறியப்படும் மேலானஅமுத வடிவான
பரம்பொருளை; பசுங்கண்ணின் - குளிர்ந்த கண்களால்;  நோக்கினார் -
பார்த்து;  உள்ளம் களிக்கின்றார் - மனம் மகிழ்ச்சியடைவாராயினர்.

     “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும், ஒண்டொடி
கண்ணே உள” என்னும்குறளை (குறள். 1101.) நோக்கியது பெண்ணின்
நோக்கும் சுவை என்பது. “ கண்டு கேட்டு உற்றுமோந்து உண்டு உழலும்
ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்......
கண்ட சதிர் கண்டொழிந்தேன், அடைந்தேன் உண் திருவடியே”  (திவ்ய.
3328) என்னும்நம்மாழ்வார்,  பாசுரமும் காண்க. “ஐம்புலன்கள் ஆர வந்து
என்னுள்ளே புகுந்த விசைமாலமுதப்பெருங்கடல்” என்றார் இறைவனை
மணிவாசகரும் (திருவா. திருச்சதகம் -26) “எவ்வாறொருவர்க்கு
இசைவிப்பது (கந்தர் அநுபூதி 30) என்று அருணகிரியாரும், “இயம்பு அரும்
இன்பத்தை”என்பதனோடு ஒப்பு நோக்கத்தக்கன.  பண் என்பது இசையாம்,
இங்கு இசை வடிவானவேதம்.                                    11