முனிவர் தவச் சாலைக்கு அழைத்துச் சென்று உபசரித்தல்  

1938.மனையின் நீங்கிய மக்களை வைகலும்
நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார்,
அனையர் வந்துற, ஆண்ட எதிர்ந்தார்கள்போல்,
இனிய மா தவப் பள்ளிகொண்டு எய்தினார்.

     மனையின் நீங்கிய மக்களை - வீட்டை விட்டுப் பிரிந்து  சென்ற
பிள்ளைகளை; வைகலும் - நாள்தோறும்;  நினையும் நெஞ்சினர் -
நினைகின்ற நெஞ்சத்தோடு; கண்டிலர் நேடுவார் - காணாது
தேடுகின்றவர்கள்;  அனையர் வந்துற -அப்பிள்ளைகள் திரும்பத் தாமே
வந்து சேர; ஆண்டு எதிர்ந்தார்கள் போல் - அங்கே(அப்பிள்ளைகளை)
எதிர்ப்பட்ட பெற்றோர்களைப் போல் (மகிழ்ச்சி கொண்டு);  இனியமாதவப்
பள்ளி கொண்டு எய்தினார் -
இனிமையான தம்முடைய தவச் சாலைக்கு
(மூவரையும்)அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

     வீட்டை விட்டுப் பிரிந்து  சென்ற மக்கள் திரும்பவந்துழிப் பெற்றோர்
அடையும்மகிழ்ச்சி. இங்கே இராமபிரானைக் கண்ட முனிவரர் மகிழ்ச்சிக்கு
உவமையாயிற்று.                                               13