நாட் கடன் செய்து அமுதுண்ண முனிவர் இராமனை வேண்டுதல்  

1940. காயும், கானில் கிழங்கும், கனிகளும்,
தூய தேடிக் கொணர்ந்தனர்; ‘தோன்றல்! நீ
ஆய கங்கை அரும் புனல் ஆடினை,
தீயை ஓம்பினை, செய் அமுது’ என்றனர்.

     (அம் முனிவர்கள்), கானில் - காட்டிலிருந்து;  காயும் கிழங்கும்
கனிகளும் தூயதேடிக் கொணர்ந்தனர் -
காய், கிழங்கு, பழம்
ஆகியவற்றைத் தூயவையாய்த் தேடிக் கொண்டுவந்தவர்களாய்; (இராமனை
நோக்கி) ‘தோன்றல்! - யாவரினும் சிறந்து விளங்குபவனே!;  நீ-; ஆய
கங்கை அரும் புனல் ஆடினை -
அப்படிப்பட்டகங்கையின் அரிய நீரில்
முழுகியவனாய்; தீயை ஒம்பினை - எரியை வளர்த்து  (வழிபாடு)முடித்து;
அமுது  செய் - உண்பாயாக;’ என்றனர் - என்று சொன்னார்கள்.

     தோன்றல் - பிறர் அறியுமாறு புகழுடன் விளங்கலாம். ஆய கங்கை -
தூயதாகிய கங்கைஎன்றவாறு.  நீராடி,  எரியோம்பி,  அமுது  செய்தல்
நித்திய கரும நெறியாம்.                                         15