1944. | தள்ளும் நீர்ப் பெருங் கங்கைத் தரங்கத்தால், வள்ளி நுண் இடை மா மலராளொடும், வெள்ளி வெண் நிறப் பாற் கடல், மேலைநாள், பள்ளி நீங்கிய பான்மையின், தோன்றினான். |
தள்ளும்நீர்ப் பெருங் கங்கைத் தரங்கத்தால் - மோதுகின்ற நீரை உடைய பெரியகங்கையின் அலைகளால்; (அங்கே சீதையோடு முழுகி எழுகின்ற இராமன்) வள்ளி நுண் இடை மாமலராளொடும் - கொடிபோன்ற நுண்ணிய இடையை உடைய தாமரையில் வீற்றிருக்கும் திருமகளுடன்; வெள்ளி வெண்நிறப் பாற்கடல் -வெள்ளி போன்ற வெண்மையான நிறத்தை உடைய பாற்கடலில் மேல்; மேலைநாள்- முன்னொரு காலத்தில்; பள்ளி நீங்கியபான்மையில் - அனந்தசயனத்தில் அறிதுயில் ஒழிந்து எழுந்து நின்ற தன்மை போல; தோன்றினான்- தோற்றமளித்தான். கங்கை அலைகள் வெண்மையாய் உள்ளன. அதன்மேல் இராமனும் சீதையும் தோன்றுதல் திருப்பாற்கடலில் துயிலும் திருமால் திருமகளோடு எழுந்து நின்றாற் போலும்என்றார். 19 |