1947. | நுரைக் கொழுந்து எழுந்து ஒங்கி நுடங்கலால் நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி, உரைத்த சீதை தனிமையை உன்னுவாள், திரைக்கை நீட்டி, செவிலியின் ஆட்டினாள். |
நுரைக் கொழுந்து எழுந்து ஒங்கி நுடங்கலால் - நுரைகளாகிய வெண்மையானகொழுந்துகள் நீரின்மேல் ஓங்கி எழுந்து வளைந்து சூழ்வதால்; நரைத்த கூந்தலின் -நரை பாய்ந்த கூந்தலை உடையாள் போல உள்ள; நங்கை மந்தாகினி - பெண்ணாகிய கங்கை;உரைத்த - பாராட்டப் பெறுகின்ற; சீதை - சீதையினது; தனிமையை -பெண்டிர் துணை இல்லாத தனிமையை; உன்னுவாள் - கருதுபவளாய்; செவிலியின் - செவிலித் தாய் போல; திரைக் கை நீட்டி - அலைகளாகிய கைகளை நீட்டி; ஆட்டினாள் - நீராட்டினாள். கங்கை செவிலித்தாயாக இருந்து சீதையை நீராட்டுவதாகக் கற்பனை செய்தார்.செவிலித்தாய் என்பதற்கு ஏற்பக் கங்கைக்கு நரைத்த கூந்தலாக நுரைக்கொழுத்தைக் கூறினார்.“நரை விராவுற்ற நறுமென் கூந்தல் செம்முது செவிலியர்” (அகநா.254) என்பதும்காண்க. 22 |