1948.மங்கை வார் குழல் கற்றை மழைக் குலம்
தங்கு நீரிடைத் தாழ்ந்து குழைப்பன,
கங்கை யாற்றுடன் ஆடும் கரியவள்
பொங்கு நீர்ச் சுழி போவன போன்றவே.

     மங்கை வார் குழல் கற்றை மழைக்குலம் - சீதையின் நீண்ட
கூந்தல் தொகுதியாகியமேகக் கூட்டம்;  தங்கும் நீரிடைத் தாழ்ந்து
குழைப்பன -
அவள் குளிக்கின்றநீரிடத்து  உள் தாழ்ந்து  சுழலுவன (எது
போலும் எனில்); கங்கையாற்றுடன் ஆடும் கரியவள் -கங்கை
யாற்றுடனே வந்து  கலக்கின்ற யமுனா நதியின்;  பொங்கு நீர்ச்சுழி -
மேல்எழும்பிய கரிய நீர்ச்சுழிகள்;  போவன போன்ற - போகின்ற
தன்மை போலும்.

     கங்கை வெண்ணிறமுடையது. யமுனை கருநிறம் உடையது. சீதையின்
கூந்தல் முழுகுங்கால் நீரில்சுழலுதல் யமுனையின் சுழி போல்
தோன்றுவதாகக் கற்பனை. கங்கையும் யமுனையும் கலக்கின்ற இடம்
பிரயாகையாம்.                                                23