1954.துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த பேர் -
அடியன், அல செறிந்தன்ன நிறத்தினான்,
நெடிய தானை நெருங்கலின், நீர் முகில்
இடியினோடு எழுந்தாலன்ன ஈட்டினான்.

     (குகன் ) துடியன் - துடி என்னும் பறை உடையவன்;  நாயினன் -
வேட்டைநாய்களை உடையவன்;  தோற் செருப்பு ஆர்த்த பேர்
அடியன் -
தோலாற் செய்த மிதியடிஇறுக்கிய பெரிய பாதங்களை
உடையவன்;  அல் செற்நிதன்ன நிறத்தினான் - இருள்நெருங்கித்
திரண்டால் ஒத்த கருநிறம் உடையவன்;  நெடிய தானை நெருங்கலின் -
தன்னுடையமிகப்பெரிய சேனை நெருங்கி் வருதலின்; நீர் முகில் -
பெய்யும் மேகம்;  இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான் -
இடியோடு கூடி மேற் கிளம்பினாற் போன்ற தன்மைகொண்டவன்.

     மேகம் குகனுக்கும், இடி ஆர்ப்பரிப்பு அவன் சேனைக்கும்
உவமையாம். வேட்டுவராதலின் துடி, நாய் முதலியன கூறப்பெற்றன.       2