1957. | பல் தொடுத்தன்ன பல் சூல் கவடியன், கல் தொடுத்தன்ன போலும் கழலினான், அல் தொடுத்தன்ன குஞ்சியன், ஆளியின் நெற்றொடு ஒத்து நெரிந்த புருவத்தான். |
பல் தொடுத்து அன்ன சூல் பல் கவடியன் - பற்களைத் தொடுத்தாற் போன்றஉட்குடைவான பல பலகறைகளை அணிந்தவன்; கல் தொடுத்து அன்ன போலும் கழலினான் - கற்களை ஒன்று சேர வைத்தாற் போன்ற திண்ணிய வீரக்கழலை உடையவன்; அல் தொடுத்தன்ன குஞ்சியன் - இருளைப் பின்னினாற் போன்ற கரிய தலை மயிரை உடையவன்; ஆளியின்நெற்றொடு ஒத்து தெரிந்த புருவத்தான் - ஆளிச் செடியின் வற்றி உலர்ந்த காயைப் போன்றுநெறிப் புடைய புருவத்தை உடையவன். கவடி - பலகறை. சோழி எனவும் வழங்கும். தற்காலத்துக் குறவர்கள் இவ்வகை மணிகளைச்கோத்தணிதல் கண்கூடு. ஆடவர் தலைமயிரைக் குஞ்சி என்றல் வழக்கு. ஆளி நெற்று புருவ நெரிப்புக்குஉவமையாம். 5 |