1958.பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன்,
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்,
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான்.

     பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி - பனைமரத்தினது
வலிய சிறாம்பு போலவிளங்கி நெருங்கியுள்ள;  வண்ண வன் மயிர் -
கருநிறம் படைத்த வலிய மயிர்கள்; வார்ந்து உயர் முன் கையன் - நீண்டு
ஒழுகப்பெற்றுள்ள முன்கையை உடையவன்; கண் அகன்தடமார்பு எனும்
கல்லினன் -
இடமகன்ற விசாலமான மார்பு என்கின்ற கல்லினை
உடையவன்;  என்ணெய் உண்ட இருள்புரை மேனியன் - எண்ணெய்
பூசப் பெற்ற இருளை ஒத்த கரிய பளபளப்பானஉடம்பை உடையவன்.

     பனஞ்செறும்பு கருமைக்கும், மேல் குத்தி நிற்கும் தன்மைக்கும்,
முன்கை மயிர்க்கும்உவமையாம். “இரும்பனஞ் செறும்பின் அன்ன பரூஉ
மயிர்” “பனஞ் செறும்பு அன்ன பன் மயிர்முன்கை” என்பனவற்றை
நோக்குக.                                                     6