1960.ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்
நாற்றம் மேய நகை இல் முகத்தினான்,
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்,
கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான்.1

     ஊற்றமே மிக - வலிமை மிகும்படி;  ஊனொடு மீன் நுகர் -
விலங்குகளின்இறைச்சியோடு மீனையும் தின்று;  நாற்றம் மேய - புலால்
நாற்றம் பொருந்திய;  நகை இல் முகத்தினான் - சிரிப்பு என்பது சிறிதும்
இல்லாத (கடு கடுப்பான) முகத்தினைஉடையவன்;  சீற்றம் இன்றியும் -
கோபம் இல்லாத போதும்;  தீ எழ நோக்குவான் -கனல் கக்குமாறு
பார்ப்பவன்; கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான் - இயமனும்
பயப்படும்படிஅதிர்ந்து  ஒலிக்கின்ற குரலை உடையவன்.

     புலால் நாறும் வாய்,  சிரிப்பற்ற முகம்,  கனல் பார்வை,  இடிக்குரல்
என்று வேட்டுவச்சாதி இயல்புக் கேற்பக் குகன் தன்மைகளைக் கூறினார்.
கூற்றம் - உம்மைதொக்கது.                                      8