1961. | சிறுங்கிபேரம் எனத் திரைக் கங்கையின் மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன், ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன்,- இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான். |
சிருங்கி பேரம் என - சிருங்கி பேரம் எனப் பெயர் பெற்று; திரைக் கங்கையின் - அலை வீசும் கங்கை யாற்றின்; மருங்கு தோன்றும் நகர்- பக்கத்தில் தோன்றுகின்ற நகரிலே; உறை வாழ்க்கையன் - தங்கி வாழ்கின்ற வாழ்க்கையை உடையவன் ஆகிய அவன்; இருந்த வள்ளலை - (முனிவர் தவச்சாலையில்)தங்கியிருந்த இராமபிரானை; காண - காண்பதற்கு; ஒருங்கு தேனொடு மீன்உபகாரத்தன்- ஒரு சேரத் தேனும் மீனும் என்ற கையுறைப் பொருளை ஏந்தியவனாய்; வந்துஎய்தினான்- வந்து சேர்ந்தான். சிருங்கி பேர நகர் அரசன் குகன், அயோத்தி அரசனாகிய இராமனைக் கையுறைப் பொருளாகத்தேனும் மீனும் கொண்டு காண வந்தான். “குகன் எனும் நாமத்தன்’ (1053.) என்பது முதல் இதுவரைகுகனது தன்மையும் வடிவும் கூறி, அவன் இராமனைக் காண வந்தான் எனமுடித்தார். 9 |