இராமன் இருந்த தவச்சாலையைக் குகன் அடைதல் 1962. | சுற்றம் அப் புறம் நிற்க, சுடு கணை வில் துறந்து, அரை வீக்கிய வாள் ஒழித்து, அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன், நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான். |
சுற்றம் அப்புறம் நிற்க - உடன் வந்த வேட்டுவச் சுற்றம் வேறொரு பக்கத்தில்ஒதுங்கிநிற்க; சுடு கணை வில் துறந்து - பகைவரை அழிக்கும் அம்பையும் வில்லையும்விலக்கி வைத்து; அரை வீக்கிய வாள் ஒழித்து- இடைக்கச்சில் கட்டப்பெற்றவாளையும் நீக்கி; அற்றம் நீத்த மனத்தினன்- பொய்யற்ற தூய மனம் உடையவனாய்; அன்பினன்- இராமன்பால் கொண்ட சிறந்த பக்தி உடையவனாய்; நல் தவப் பள்ளிவாயிலை நண்ணினான் - நல்ல தவச்சாலையின் வாயிலை அடைந்தான். முனிவர் வாழும் இடத்துக்கு அருகில் உள்ளவன் ஆதலின், குகன் முனிவரது தவச்சாலையைஅனுகும்போது எவ்வாறு அணுகல் வேண்டும் என்பது அறிந்தவன். அன்றியும் இராமபக்தியுடன்செல்கின்றவன் வேட்டைக்குச் செல்வான் போல வில், அம்பு, வாள் ஆகியவற்றுடனும், சேனையுடனும் செல்லல் ஆகாதன்றோ? ஆதலின், அவற்றையெல்லாம் ஒழித்து அடக்க ஒடுக்கத்துடன்சென்றான் என்றார். 10 |