குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்  

1963.கூவாமுன்னம், இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’ என, அன்பின் இறைஞ்சினான்;
‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்’ என்றான்.

     கூவா முன்னம் - குகன் அழைப்பதற்கு முன்னமே;  இளையோன்
குறுகி -
இலக்குவன் அவனைச் சென்றடைந்து; ‘நீ ஆவான் யார்’ என -
நீ யார்? என்று வினாவ; அன்பின் இறைஞ்சினான் - அன்போடு குகன்
அந்த இலக்குவனை வணங்கினான்;  (முன் அறியாதவன் ஆதலின்
அவனையே இராமனாகக் கருதி) ‘தேவா! - அரசனாகிய தெய்வமே!; நாய்
அடியேன் -
நாய் போலக் கீழான அடிமையாகிய; நாவாய் வேட்டுவன் -
கங்கையைக்கடக்க ஓடங்களை உடைய வேட்டுவச் சாதியினனாகிய
குகனாவேன்;  நின் கழல்சேவிக்க வந்தனன்- உனது திருவடிகளை
வணங்கும் பொருட்டு வந்தேன்;’ என்றான்-.

     குகன் அழைப்பதற்கும் இலக்குவன் அங்கே வருதற்கும் இடையே கால
இடைவெறியின்மையைஅறிவிக்கக் ‘கூவா முன்னம்’ என்றார்.  இராமனைச்
சேவிக்க வந்த குகன் இலக்குவனையே இராமனாகநினைத்துத் ‘தேவா! நின்
கழல் சேவிக்க வந்தனன்’ என்பது  குழந்தைத் தன்மையான மாசற்றகுகனது 
அன்பின் பொலிவை எடுத்துக் காட்டும்.                             11