இலக்குவன் குகன் வரவை இராமனுக்கு அறிவித்தல் அறுசீர் ஆசிரிய விருத்தம் 1964. | ‘நிற்றி ஈண்டு’ என்று, புக்கு நெடியவன் - தொழுது, தம்பி, ‘கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன், நிமிர்ந்த கூட்டச் சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்; எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன்’ என்றான். |
தம்பி- இராமனது தம்பியாகிய இலக்குவன்; ‘நிற்றிஈண்டு’ என்று -குகனைப் பார்த்து இங்கேயே நில் என்று சொல்லி; புக்கு- (இராமன் இருந்ததவச்சாலையில் உள்ளே) புகுந்து; நெடியவன்தொழுது - பெருமையிற் சிறந்துயர்ந்த இராமனைவணங்கி; ‘கொற்றவ- அரசனே!; உள்ளம் தூயவன் - மனத்தால்பரிசுத்தமானவன்; தாயின் நல்லான் - தாயைக் காட்டிலும் மிக்க அன்பையுடைய நல்லவன்;எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறை -மோதுகின்ற நீரை உடைய கங்கையாற்றில் செல்லும் மரக்கலங்களுக்குத் தலைவன்; குகன் ஒருவன்- குகன் என்ற பெயரை உடைய ஒருவன்; நிமிர்ந்த கூட்டச் சுற்றமும் தானும் -பெருந்திரளாக உள்ள உறவினரும் தானுமாக; நின்னைக் காணக் குறுகினன்!- உன்னைக் காணும் பொருட்டு வந்துள்ளான்; என்றான்-. அரசரைக் காணச் செவ்வியறிந்து செல்லல் முறை ஆதலின், குகனை வெளியே நிற்கச்செய்து, இராமன்பால் தெரிவிக்கச் சென்றான் இலக்குவன். பார்த்த அளவில் தன்னையேஇராமனாக எண்ணும் குகனது வெள்ளை உள்ளத்தை அறிந்தபடியால் ‘உள்ளம் தூயவன்’ என்று முதலிற்கூறினான். உண்ணுதற்குரிய பொருள்களை என்றும் எடுத்துவருதல் தாயின் தன்மையாதலின் ‘தேனும்மீனும் கொண்டணுகிய குகனது தாயன்பைக் கருதித் ‘தாயின் நல்லான்’ என்றான். நாம்கங்கையைக் கடத்தல் வேண்டும் ஆதலின், இவனது தோழமை நமக்கு மிகவும் இன்றியமையாதது என்பதைப் புலப்படுத்த ‘நாவாய்க்கு இறை’ என்றான். இங்ஙனம் இராமன் ஏற்றுக்கொள்ளும் முன்னரேஇலக்குவன் குகனது தோழமையை ஏற்று அங்கீகரித்தான் என்னும்படி இவ்வறிமுகம் அமைந்துள்ளதுஅறிந்து இன்புறத்தக்கது. 12 |