குகனது விண்ணப்பம்  

1969.கார் குலாம் நிறத்தான் கூற,
     காதலன் உணர்த்துவான், ‘இப்
பார் குலாம் செல்வ! நின்னை,
     இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான்,
     இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன்; ஆனது, ஐய!
     செய்குவென் அடிமை’ என்றான்.

     கார் குலாம் நிறத்தான் கூற - மேகம் போல் உள்ள கரு நிறம்
உடையதிருமேனியனாகிய இராமன் இவ்வாறு கூற;  காதலன்
உணர்த்துவான் -
அவனிடத்தில் பேரன்புகொண்ட குகன் சொல்வான்;
‘இப் பார் குலாம் செல்வ! - இந்தப் பூமி முழுவதும் ஆளும்செல்வத்துக்
குரியவனே!’ நின்னை - உன்னை;  இங்ஙனம் பார்த்த கண்ணை -
இவ்வாறு  சடைமுடிக் கோலத்தோடு பார்த்த கண்களை;  ஈர்கிலாக்
கள்வனேன் யான் -
இதுகாறும் பிடுங்கி எறியாமல் உன்பால்
அன்புடையவன் போல நடிக்கின்ற திருடன் யான்; இன்னலின் இருக்கை
நோக்கி -
இத்தகைய துன்பத்தில் இருந்தபடியைப் பார்த்து; தீர்க்கிலேன்-
உன்னைப் பிரிய மாட்டாதவனாக இருக்கிறேன்;  ஆனது - என்நிலைமை
அவ்வாறாகியது; ஐய! - ஐயனே; அடிமை செய்குவென்’ - (உன்
அருகேயேஇருந்து உனக்குரிய) தொண்டுகளைச் செய்வேன்; என்றான்-.

     அரச குமாரனாகியஇராமன் முடிபுனையாது சடைமுடி தரித்த
கோலத்தோடு வந்தது கண்டு மனம் இரங்கித் தழுதழுத்த குகன் தன்னைத்
தாழ்மைப்
படுத்திக்கொண்டு‘இவ்வாறு பார்த்த கண்ணைப் பிடுங்கி
எறியாமல் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேனே,  நான் ஒரு
வஞ்சகன்’ என்ற அவலித்த தாகக் கொள்க. இராமனுடனேயே 
இருந்து தொண்டு செய்ய வேண்டினான் குகன்.                    17