சூரியன் மறைதல்  

1973.விரி இருட் பகையை ஓட்டி,
     திசைகளை வென்று, மேல் நின்று,
ஒரு தனித் திகிரி உந்தி,
     உயர் புகழ் நிறுவி, நாளும்
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து
     இருந்து, அருள்புரிந்து வீந்த
செரு வலி வீரன் என்னச்
     செங் கதிர்ச் செல்வன் சென்றான்.

     விரி இருள் பகையை ஓட்டி - பரந்துள்ள இருள் கூட்டம் போன்ற
பகையை ஓடச்செய்து; திசைகளை வென்று - திக்குகளை யெல்லாம்
தன்னுடையதாக வெற்றி கொண்டு;  மேல் நின்று - மேலான இடத்தில்
இருந்து; ஒரு தனித் திகிரி உந்தி - ஒப்பற்றஆணைச் சக்கரத்தைச்
செலுத்தி; உயர் புகழ் நிறுவி - தன்னுடைய சிறந்த புகழைநிலைநாட்டி;
நாளும் - நாள்தோறும்;  இருநிலத்து எவர்க்கும் - இவ்உலகில்உள்ள
எல்லார்க்கும்; உள்ளத்து இருந்து - மனத்தின்கண் இருந்து; அருள்
புரிந்து -
அருளைச் செய்து;  வீந்த - இறந்து போன;  செருவலி வீரன்
என்ன -
போர்வலிமைஉடைய வீரனாகிய தசரத சக்கரவர்த்தி போல;
செங்கதிர்ச் செல்வன் - சூரியன்;  சென்றான் - மறைந்தான்.

     இருளை ஓட்டி, திசையெல்லாம் ஒளிபரவ, ஆகாயத்தில் இருந்து;
ஒற்றைச் சக்கரத் தேரைச்செலுத்தி,  புகழை நிறுத்தி,  மக்கள் எல்லார்
உள்ளத்தேயும் இருந்து நலம் செய்து மறைதல்சூரியனுக்கும் உரியதாதலைப்
பொருத்திக் காண்க.  சூரிய குலத்தரசனாகிய தசரதனைச் சூரியனோடு
உவமித்ததாகும்.                                                21