இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் காத்து நிற்றல் 1974. | மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி, வைகல், வேலைவாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல் மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர்; வரி வில் ஏந்திக் காலைவாய் அளவும், தம்பி இமைப்பிலன், காத்து நின்றான். |
வைகல் மாலை வாய் - நாளின் மாலைக் காலத்தே; நியமம் செய்து -செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து; மரபுளி இயற்றி - செய்ய வேண்டிய கடமைகளைச்செய்து; மரபுளி இயற்றி - செய்ய வேண்டிய முறைப்படியே செய்து; வேலைவாய் அமுதுஅன்னாளும் - பாற்கடலிலிருந்து தோன்றிய அமுதத்தை ஒத்தவளும்; வீரனும் - இராமபிரானும்; பாரின் - பூமியில்; மாலை விரிந்த நாணல் பாயல்வாய்- வரிசையாக விரிக்கப் பெற்ற நாணற்புல்லாகிய படுக்கையிலே; வைகினர் - உறங்கினராக; தம்பி - இலக்குவன்; காலைவாய் அளவும் - காலைப் பொழுது வரும் வரை; வரி வில் ஏந்தி - கட்டமைந்த வில்லை ஏந்தி; இமைப்பிலன் - கண்இமையாது; காத்து நின்றான் - அவ்விருவரையும் காவல் செய்து நின்றுகொண்டேயிருந்தான். இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் கண் உறங்காமல் நின்று கொண்டே காவல் செய்து கொண்டிருந்தான் என்பதாம். ‘மாலை விரிந்த நாணல் பாயல்’ - மாலையாகவிரிந்த நாணற்புல் படுக்கை என்றவாறாம். 22 |