இராமன் குகனை நாவாய் கொணரக் கட்டளை இடல் 1978. | நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி, நாமத் தோள் முதற்கு அமைந்த வில்லான், மறையவர் தொடரப் போனான், ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி, ‘ஐய! கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின்’ என்றான். |
நாமத் தோள் முதற்கு அமைந்த வில்லான் - அச்சந்தரும் தோளிடத்திற்குப்பொருந்திய வில்லை உடைய இராமன்; நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி -வைகறைக் காலத்தில் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் விரும்பிச் செய்து; மறையவர் தொடரப் போனான் - வேதியர்கள் தன்னைத் தொடர்ந்து வரச் செல்கின்றவன்; ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பினை நோக்கி- அடிமைத்தன்மைக்குப் பொருந்தியநட்புரிமை உடைய அன்புள்ளம் கொண்ட குகனைப் பார்த்து; ‘ஐய! - ஐயனே; கோள்முதற்கு அமைந்த நாவாய் - கொண்டு செல்லுதற்குரிய தரம் வாய்ந்த மரக்கலங்களை; விரைவின் கொண்ருதி’ - விரைவாகக் கொண்டு வருவாயாக;’ என்றான் -. தோள் முதல் - முதல் - இடம் என்னும் பொதுப் பொருள். நாள் முதல் வைகறையில்தொடங்குமாதலின் வைகறை யென்றாம் - அது காலைச்சந்தி நிகழ்த்துதற்கு உரிய பொழுதுஆகலின். 26 |