1980.‘பொய்ம் முறை இலரால்; எம்
     புகல் இடம் வனமேயால்;
கொய்ம் முறை உறு தாராய்!
     குறைவிலெம்; வலியேமால்;
செய்ம்முறை குற்றேவல்
     செய்குதும்; அடியோமை
இம் முறை உறவு என்னா
     இனிது இரு நெடிது, எம் ஊர்:

     ‘கொய்ம் முறை உறு தாராய்! - கத்திரிகையால் ஒழுங்குசெய்யப்
பெற்றுப்பொருந்திய மாலையை அணிந்தவனே!; பொய்ம் முறை இலரால்-
எம் மக்கள் வஞ்சகம்அறியாதவர்கள்;  எம் புகலிடம் வனமேயால்-
எங்களுடைய இருப்பிடம் இக்காடே ஆகும்; குறைவிலெம் - எவற்றாலும்
குறையுடையோ மில்லை; வலியேமால் - (பகைவரைஅழிக்கும்) வலிமையும்
உடையேம்;  செய்ம் முறை குற்றேவல் செய்குதும் - செய்ய வேண்டிய
முறைப்படி  உனக்கு வேண்டிய சிறு தொண்டுகளைச் செய்வோம்;
அடியோமை - உன்தொண்டர்களாகிய எங்களை;  இம் முறை உறவு
என்னா
- இந்த முறையான உறவினர்கள் என்றுகருதி;  எம் ஊர் -
எங்களுடைய  ஊரிலே; நெடிது - நீண்ட  காலம்; இனிது இரு’ -
இனிமையாக இருப்பாயாக.’

     உள்ளொன்று புறம்ஒன்று அற்றவர் வேடுவர் என்பதனைப் ‘பொய்ம்
முறை இலர்’ என்றுகூறினான். காட்டில் உள்ளவர்கள் ஆதலின் உணவு
கிடைக்கும் இடம்,  பாதுகாப்பான இடம்,  நீர்நிலைகளுக்குரிய வழிகள்
அனைத்தும் எங்களுக்குப் பழக்கம் ஆதலின் உனக்கு அடிமை செய்ய
வசதியாகும் என்று
நினைப்பித்தான்.எங்களையும் உனது உறவு முறையாகக்
கருதி எம் ஊரில் தங்க வேண்டும் எனவேண்டினான் குகன். ‘ஆல்’
உரையசை.                                                  28