1986.‘விடு, நனி கடிது’ என்றான்;
     மெய் உயிர் அனையானும்,
முடுகினன், நெடு நாவாய்;
     முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக்
     கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும்
     எதி உறு மெழுகு ஆனார்.

     (இராமனும்) ‘நனி கடிது விடு’ என்றான் - மிக வேகமாக
நாவாய்களைச் செலுத்து என்றுகூற; மெய் உயிர் அனையானும் -
உடம்பும்  உயிரும் ஒத்த நண்பினை இராமன்பால் உடையகுகனும்;
முரிதிரை நெடு நீர்வாய் - ஒடிகின்ற அலைகளையுடைய நீண்ட கங்கை
நீரிடத்தே; நெடு நாவாய் - பெரிய ஓடத்தை;  முடுகினன் - விரைந்து
செலுத்த; அதுகடிதினின் மட அன்னக் கதிசெல - அந்நாவாய்
விரைவாக இளைய அன்னப்பறவை நீரிற்செல்லுமாறு போலச் செல்ல;
நின்றார் மறையோரும் - கரையின்கண் நின்றவர்களாகியவேதியரும்;
இடர் உற - துன்பமடைந்து;  எரி உறு மெழுகு ஆனார் - நெருப்பில்
பட்ட மெழுகைப் போல மனம் உருகி இரங்கினார்கள்.

     நட்புக்கு உடம்பும் உயிரும் சேர்ந்த சேர்க்கையைச் சொல்வது வழக்கு.
ஆதலின், ‘மெய்உயிர் அனையானும்’ என்று குகன் - இராமனுக்குள்ள
நட்பைச் சொன்னார். ‘உடம்பொடு உயிரிடைஎன்ன மற்றன்ன,
மடந்தையொடு எம்மிடை நட்பு’ என்ற குறளையும் (குறள் 1122) காண்க.
நாவாய்களின் செல்கை அன்னச்செலவு போலும் என்றார்;  பின்னும்
அன்னப் பேடை சிறை இலதாய்க்கரை, துன்னிற்றென்னவும் வந்தது
தோணியே’ என்றது  (2372.)காண்க.                              34