1988. | சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை, காந்து இன மணி மின்ன, கடி கமழ் கமலத்தின் சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால், ஏந்தினள்; ஒரு தானே ஏற்றினள்; இனிது அப்பால். |
சாந்து அணி - சந்தனம் அணிந்த; புளினத்தின் தடமுலை- மணல் மேடுகளாகிய பெரிய முலைகளை உடைய; உயர் கங்கை - உயர்ந்த கங்கையானவள்; காந்துஇன மணி மின்ன - எரிகின்ற கூட்டமான இரத்தினங்கள் விட்டு விளங்க; கடி கமழ்கமலத்தின் - மணம் வீசுகின்ற தாமரை மலரினால்; சேந்து ஒளி விரியும் -சிவந்து ஒளி பரவுகின்ற; தெண் திரை எனும் நிமிர் கையால் - தெளிந்த அலைகள் என்று கூறப்படும் நீண்ட கைகளால்; ஒரு தானே ஏந்தினள் - தான் ஒருத்தியே அந்த ஓடத்தைச்சுமந்தவளாய்; இனிது அப்பால் ஏற்றினள் - இனிமையாக அக்கரையில் கொண்டுசேர்த்தாள். புளினம் - மணல் திட்டு. நதிகளுக்கு இடையில் உள்ளவை. மணற்குன்று எனலும் ஆம். அவற்றைநகில்களாக்கிக் கங்கையைப் பெண் ஆக்கினார். நீரலைகளின் மேல் நாவாய் செல்வது கங்கைதான் சுமந்து அக்கரை கொண்டு சேர்ப்பதுபோல் உள்ளது என்றது தற்குறிப்பேற்றம். அலையைக்கையாக்கியதற்கு ஏற்பக் ‘கடிகமழ் கலத்தின் சேந்து ஒளிவிரியும்’ என்றார். 36 |