தானும் உடன்வர அனுமதிக்க இராமனைக் குகன் வேண்டுதல் 1990. | ‘நெறி, இடு நெறி வல்லேன்; நேடினேன், வழுவாமல், நறியன கனி காயும், நறவு, இவை தர வல்லேன்; உறைவிடம் அமைவிப்பேன்; ஒரு நொடி வரை உம்மைப் பிறிகிலேன், உடன் ஏகப் பெறுகுவென் எனில் நாயேன்; |
‘நாயேன் - நாய்போற் கடைப்பட்டவனாகிய அடியேன்; உடன் ஏகப் பெறுகுவென்எனின்- உங்களுடனே வருகின்ற பேற்றைப் பெறுவேனானால்; நெறி - நீங்கள்செல்லும் வழியை; இடு நெறி வல்லேன்- அமைத்துத்தரும் வல்லமை உடையேன்; நறியனகனி காயும் நறவு இவை வழுவாமல் நேடினென் தர வல்லேன் - மிகவும் நல்லனவாகிய பழம், காய்தேன் முதலியவற்றைச் சிறிதும் குறைவுபடாமல் தேடிக் கொண்டுவந்து தருதற்கு வலிமை உடையேன்; உறைவிடம் அமைவிப்பேன் - செல்லும் வழியிடங்களில் தங்குதற்குரிய இடங்களைஅமைத்துத்தருவேன்; ஒரு நொடி வரை உம்மைப் பிறிகிலென் - ஒரு நொடிக்கால அளவும் உங்களைப் பிரியாமல் பாதுகாப்பேன்.’ தான் உடன் வருவதால் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகளைச் சொல்லி, தன்னை உடன்கொண்டு செல்ல வேண்டினான் குகன் என்க. குகனது பண்பு முதிர்ச்சியை இங்கே கூனி, காய், நறவு, என்றுமட்டுமே கூறி, மீனைக் கூறாது விட்டதிலும் காண்க. ‘நொடி’ என்பது ஒரு கால அளவு கண்ணிமைப் பொழுது அதற்குச் சமம். “கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை, நுண்ணிதின்உணர்ந்தோர் கண்ட வாறே” என்பது (தொல். எழுத். நூன்.) காண்க. நெறி - பெருவழி, இடுநெறி - ஒற்றையடிப்பாதை, குறுக்குப்பாதை எனவும் கொள்ளலாம். 38 |