1991. | ‘தீயன வகை யாவும் திசை திசை செல நூறி தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன்; மேயின பொருள் நாடித் தருகுவென்; வினை முற்றும் எயின செய வல்லேன்; இருளினும் நெறி செல்வேன்; |
‘தீயன வகை யாவும் - கொடிய தன்மை படைத்த எப்பொருளும்; திசை திசை செலநூறி - நாலாதிசைகளிலும் ஓடி ஒளியும்படி அழித்து; தூயன உறைம கானம் - தூய விலங்குமுதலியன வசிக்கும் காடுகளை; துருவினென் வரவல்லேன் - தேடித் தருவதற்கு வல்லமைஉடையேன்; மேயின பொருள் நாடித் தருகுவென் - நீங்கள் விரும்பி பொருளை எங்கிருப்பினும் தேடிக் கொண்டுவந்து தருவேன்; ஏவின வினைமுற்றும் செயவல்லேன் -நீங்கள் ஏவிய எல்லா வேலைகளையும் செய்ய வல்லமை உடையேன்; இருளினும் நெறி செல்வேன் -நள்ளிருள் பொழுதும் காட்டு வழியில் செல்லும் தீரம் உடையேன். விலங்கு, பறவை, மரம், செடி, கொடி முதலியவற்றுள் ஊறிழைக்கும் எப்பொருளும் அடங்கத்‘தீயன வகையாவும்’ என்றும். தூயன அனைத்தும் அடங்க, ‘தூயன உறைகானம்’ என்றும் கூறினான். காட்டில் பழகியவன் ஆகலின் இருளிடையிலும் செல்லுதல் தனக்கு எளிது என்றானாம். 39 |