1997.‘அங்கு உள கிளை காவற்கு
     அமைதியின் உளன். உம்பி;
இங்கு உள கிளை காவற்கு
     யார் உளர்? உரை செய்யாய்;
உன் கிளை எனது அன்றோ?
     உறு துயர் உறல் ஆமோ?
என் கிளை இது கா, என்
     ஏவலின் இனிது’ என்றான்.

     ‘உம்பி - உன் தம்பியாகிய பரதன்; அங்கு உள கிளை காவற்கு
அமைதியின் உளன்-
அயோத்தியில் உள்ள குடிமக்களையும் சுற்றத்தையும்
காப்பாற்ற வேண்டி அதற்குரியஆட்சிக் குணங்களோடு இருக்கின்றான்; (நீ
என்னுடன் வந்துவிட்டால்) இங்கு உள கிளை காவற்குயார் உளர்?
உரை செய்யாய் -
சிருங்கிபேரத்தில் உள்ள சுற்றத்தையும் குடிகளையும்
காப்பாற்ற யார் இருக்கின்றார்கள், சொல்வாயாக; (நீயும் நானும் ஒன்றான
பிறகு)  உன்கிளை எனது  அன்றோ - உன்னுடைய சுற்றம் என் சுற்றம்
அல்லவா?; உறு துயர் உறர் ஆமோ?-  மிக்க துன்பத்தை என் பிரிவால்
எய்தலாமோ; என் கிளை இது என் ஏவலின் இனிது கா’- என்னுடைய
சுற்றமாகிய இவ்வேடுவர்களை என் கட்டளையால்  இனிது காப்பாயாக;’
என்றான் -.

     உன் ஏவலின் நான் இருக்கின்றேன் என்று கூறிய இராமன்
அதனையும் மனம் கொள்ளாது குகன்படும் அவதி கண்டு, ‘நானே
தலைவன் நீ என் ஏவல் வழி என் சுற்றமாகிய இவ்வேடுவர்களைக்
காப்பாற்றி ஆட்சி செய்து இங்கே தங்குவாயாக’ என்றான்; அவன்
மறுக்கமாட்டாமைக்கு எடுத்துக்காட்டாகப் பரதனைக் கூறினான்.         45