2000. | வெயில், இள நிலவேபோல், விரி கதிர் இடை வீச, பயில் மரம் நிழல் ஈன, பனி புரை துளி மேகப் புயல் தர, இள மென் கால் பூ அளவியது எய்த, மயிலினம் நடம் ஆடும் வழி இனியன போனார். |
வெயில் - சூரியன்; விரி கதிர் - பிரிந்த தன் கிரணங்களை; இள நிலவே போல் இடைவீச - இளமையான நிலவொளி போலத் தண்மையாக இடையிடையே வீசவும்; பயில் மரம் - (வனத்தில்) நெருங்கியுள்ள மரங்கள்; நிழல் ஈன - நிழலைத்தரவும்; மேகப் புயல் - மேக மழை; பனி புரை துளிதர - பணியை யொத்தகுளிர்ந்த சிறிய துளிகளைத் தரவும்; இளமென் கால் - இளைய மெல்லிய தென்றற்காற்று; பூ அளவியது எய்த - பூக்களின் நறுமணங்களோடு கலந்து வந்து அடையவும்; மயில் இனம்நடம் ஆடும் - மயிற்கூட்டங்கள் நடனம் ஆடுகின்ற; இனியன வழி - இனிமையாகிய வழிகளில்; போனார் - மூவரும் சென்றார்கள். வெயிலொளி நிலவொளிபோல வீசுதல், மரம் நிழல் தருதல்,மேகம் சிறுநீர்த் திவலை சிந்தல், தென்றல் பூமணத்தோடு வீசுதல், மயில்கள் நடனம் ஆடுதல்ஆகியவற்றால் இவர்கள் செல்லும் வழிகள் களைப்புத் தராது இனியனவாயின. 2 |