2003.‘சேந்து ஒளி விரி செவ் வாய்ப்
     பைங் கிளி, செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிக்
     கோதுவ, - கவின் ஆரும்
மாந் தளிர் நறு மேனி
     மங்கை! - நின் மணி முன்கை
ஏந்தின எனல் ஆகும்
     இயல்பின; இவை காணாய்!

     கவின் ஆரும்- அழகு பொருந்திய; மாந்தளிர் நறுமேனி மங்கை-
மாந்தளிர் போன்ற மணமும் நிறமும் கூடிய மேனியை உடைய சீதையே!;
சேந்து  ஒளி விரி - சிவந்து  ஒளி விரிக்கின்ற;  செவ்வாய் - சிவந்த
வாயினை உடைய;  பைங்கிளி -பசிய கிளி;  கோலம் செறி - அழகு
பொருந்திய;  காந்தளின் மலர் ஏறிக் கோதுவ -காந்தள் மலரின்மேல்
ஏறி அம் மலரைக் கோதுகின்றவை;  நின் மணி முன்கை ஏந்தின எனல்
ஆகும் இயல்பின -
நின்னுடைய அழகிய முன்கையில் ஏந்திக்
கொண்டிருக்கின்றதாகச்சொல்லப்பெறும் இயல்பினை உடைய; இவை -
இக் காட்சிகளை; காணாய் -.

     காந்தள் மலர் மகளிர் கைபோலும் ஆதலின் அம்மலர்மேல் ஏறி அம்
மலரைக் கோதுகின்றகிளி, பிராட்டியின் முன் கைமேல் ஏறி அமர்ந்துள்ளது
போல் காட்சி அளிப்பதாயிற்று.                                    5