2006. | ‘அருந்ததி அனையாளே! அமுதினும் இனியாளே! - செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம் பொருந்தின களி வண்டின் பொலிவன, பொன் ஊதும் இருந்தையின் எழு தீ ஒத்து எழுவன; - இயல் காணாய்! |
அருந்ததி அனையாளே! - அருந்ததியை ஒத்தவளே!; அமுதினும் இனியாளே! - அமிழ்தத்தைக் காட்டிலும் இனியவளே!; செருந்தியின் மலர் தாங்கும் - செருந்திமலரைத் தாங்கிக்கொண்டுள்ள; செறி இதழ் - நெருங்கிய இதழ்களை உடைய; வனசோகம் - காட்டின் கண் உள்ள அசோகம் ஆனது; பொருந்தின களி வண்டின் பொலிவன -தம்மிடத்தே பொருந்தினவாய களிப்பு நிறைந்த வண்டுகளாற் பொலிவனவாகிய அவை; பொன்னூதும் இருந்தையின் - பொன்னை வைத்து ஊதுகின்ற பொற்கொல்லனது கரியில்; எழுதீ ஒத்து எழுவது ஓர் இயல் - மேல் எழுந்து எரிகின்ற நெருப்பை ஒத்துத் தோன்றுகின்ற ஓர் தன்மையை; காணாய் -. செருந்திப் பூ பொன்னாகவும் அதைத் தாங்கிய அசோக மலர் நெருப்பாகவும், அதனைச்சுற்றியுள்ள வண்டுகள் கரியாகவும் உவமை கொள்க. இருந்தை - கரி. 8 |