2007.‘ஏந்து இள முலையாளே!
     எழுத அரு எழிலாளே!
காந்தளின் முகை கண்ணின்
     கண்டு, ஒரு களி மஞ்ஞை,
‘பாந்தள் இது’ என உன்னிக்
     கவ்விய படி பாரா,
தேம் தளவுகள் செய்யும்
     சிறு குறுநகை - காணாய்!

     ஏந்து இளமுலையாளே! - (சாயாது) மேல் நிமிர்ந்துள்ள இளமையான
அழகிய முலையினைஉடையாளே!; எழுத அரு எழிலாளே - ஓவியத்தில்
எழுதுதற்கரிய அழகு படைத்தவளே!;  ஒருகளி மஞ்ஞை - மயங்கிய ஒரு
மயில்;  காந்தளின் முகை கண்ணில் கண்டு - காந்தள்அரும்பைத் தன்
கண்ணால் பார்த்து;  இது பாந்தள் என உன்னி - இது  பாம்பு என்று
கருதி;  கவ்வியபடி  பாரா - கல்விக் கொண்ட தன்மையைப் பார்த்து;
தேன் தளவுகள்- தேன் பொருந்திய முல்லை அரும்புகள்; செய்யும் சிறு
குறு நகை -
செய்கின்றஎள்ளும் புண்சிரிப்பினை;  காணாய் -.

    காந்தள் முகையைப் பாம்பு என்று மயில் கவர, அது கண்டு முல்லை
சிரிப்பதாகக் கூறியது. முல்லைஅரும்புகள் பற்களைப் போலும் ஆதலின்
அம்முல்லை அரும்புகள் தோன்றிய காட்சியைப்சிரிப்பதாகத்
தற்குறிப்பேற்றம் செய்தார்.  சிறு குறு நகை - சிறு என்பது இகழ்ச்சியையும்,
குறு என்பது புன் சிரிப்பு என்பதனையும் அறிவிக்க வந்தன.  களி மஞ்ஞை
என்றது போதை மிகுதியால்காந்தள் முகையைப் பாம்பென மயங்கியது
எனக் காரணம் கூறியவாறாம்.                                    9