2008. | ‘குன்று உறை வய மாவின் குருளையும், இருள் சிந்திப் பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும், அன்றில பிரிவு ஒல்லா; அண்டர்தம் மனை ஆவின் கன்றொடு விளையாடும் களியன பல -. காணாய்! |
குன்று உறை வயமாவின் குருளையும் - மலையில் வாழும் வலிமை உள்ள புலியின்குட்டியும்; இருள் சிந்திப் பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும் - இருள் கீழேசிதறிப் பின்னிக் கொண்டது என்னும்படியுள்ள கரிய பெண் யானை ஈன்ற சிறிய யானைக் குட்டியும்; அண்டர்தம் - இடையர்களது; மனை - வீட்டில் உள்ள; ஆவின் கன்றொடு -பசுக் கன்றோடு; அன்றில - மாறுபடாதனவாய்; களியன - களிப்புடையனவாய்; விளையாடும் பல - விளையாடுகின்ற பல உயிரினங்களையும்; காணாய் -. கரிய பிடி இருள் பின்னிப் பிணைந்திருத்தல் போலும். பிடி மண்ணில் உள்ளதாதலின்வானத்தில் பரவிய இருள் பூமியில் சிந்திப் பின்னியது போல என்றார். முனிவர் உறைவிடம்ஆதலின் இவை தம்முள் பகை இலவாய் வினையாடின என்க. 10 |