2010.‘முற்றுறு முகை கிண்டி,
     முரல்கில சில தும்பி,
வில் திரு நுதல் மாதே!
     அம் மலர் விரி கோங்கின்
சுற்று உறு மலர் ஏறித்
     துயில்வன, சுடர் மின்னும்
பொன் தகடு உறு நீலம்
     புரைவன பல - காணாய்!

     வில் திரு நுதல் மாதே! - வில்லைப் போன்ற அழகிய நெற்றியை
உடைய பெண்ணே!; சில தும்பி - சில வண்டுகள்;  அம் மலர் விரி
கோங்கின் -
அழகிய மலர்கள்விரிந்துள்ள கோங்க மரத்தினது; முற்றுறு
முகை கிண்டி -
முற்றிய அரும்புகளைக் குடைந்து(தேன் உண்டு);
முரல்கில - பாடாதனவாய்;  சுற்று  உறு மலர் ஏறி - வட்டமாகப்
பொருந்திய மலரில் ஏறி;  துயில்வன பல - உறங்குகின்றன பலவும்; சுடர்
மின்னும் -
ஒளிவிட்டு விளங்குகின்ற; பொன் தகடு உறு- பொன் தகட்டில்
பொருந்திய; நீலம் புரைவன- நீல மணியை ஒத்துள்ளனவற்றை; காணாய்-.

     முற்றுறு முகை - மலரும் பருவத்தரும்பு. அதனையே தேனீக்கள்
குடைதல் இயல்பு. கோங்கமலர்பொன்னிறம்  படைத்தது.  கோங்க மலரில்
உறங்கும் வண்டு பொன்னில் பதித்த நீலமணிபோல் உள்ளது.          12