2011. | ‘கூடிய நறை வாயில் கொண்டன, விழி கொள்ளா மூடிய களி மன்ன, முடுகின நெறி காணா, ஆடிய, சிறை மா வண்டு, அந்தரின், இசை முன்னம் பாடிய பெடை கண்ணா வருவன பல - காணாய்! |
சிறை மா வண்டு- சிறகுகளை உடைய கரிய (ஆண்) வண்டு; கூடிய நறை வாயில்கொண்ட - மிக்க தேனை வாயிற் கொண்டன வாய்; விழி கொள்ளா -(அம்மயக்கத்தால்) விழி திறந்து பார்க்க மாட்டாதவையாய்; மூடிய களி மன்ன -கண்ணை மூடிக்கொள்ளுமாறு போதை பொருந்த; முடுகின நெறி காணா - விரைந்து (பறந்து)செல்லுதற்குரிய வழியைக் காணமாட்டாதனவாய்; அந்தரின் - குருடரைப்போல; முன்னம்இசை பாடிய பெடை கண்ணா வருவன பல- முன்னால் இசைபாடிச் செல்கின்ற பெண் வண்டைக்கண்ணாகக் கொண்டு வருவன பலவற்றை; காணாய்-. குருடர் ஒலியின் மூலம் வழி அறிந்து சேறல் போல, முன்னால் பெண் வண்டுகள் பாடும் ஒலிகேட்டுத் தேன் குடித்து மயங்கிக் கண்திறவா ஆண் வண்டுகள் வழி அறிந்து சென்றன வாதலின்‘பெடை கண்ணா’ என்றார். 13 |