இராமன் சித்திரகூட மலையைச்சீதைக்குக் காட்டுதல்  

2017.என்று, நல் மடவாளோடு
     இனிதினின் விளையாடி,
பொன் திணி திரள் தோளான்;
     போயினன் நெறி; போதும்
சென்றது குடபால்; ‘அத்
     திரு மலை இது அன்றோ?’
என்றனன்; ‘வினை வென்றோர்
     மேவு இடம்’ எனலோடும்,

     பொன்திணி திரள் தோளான் - பொன் அணிகள் நெருங்கியுள்ள
திரண்ட தோளினைஉடையவனாகிய இராமன்;  என்று -இவ்வாறு கூறி;
நல் மடவானோடு - நல்லசீதையோடு; இனிதினின்விளையாடி -
இனிமையாக விளையாடி;  நெறி போயினன்-காட்டு வழியில் சென்றான்;
(அந் நிலையில்) போதும் - சூரியனம்; குடபால்சென்றது - மேற்குத்
திசையை அடைந்தது (மாலை நேரம் வந்தது);  ‘வினை வென்றோர்மேவு
இடம்’ -
வினைகளை வென்ற முனிவர்கள் தங்கியுள்ள இடமாகிய;  ‘அத்
திருமலை இதுஅன்றோ’ -
அந்தச் சித்திரகூட மலை இதுவல்லவா; 
என்றனன் - என்று  (சீதையைப்
பார்த்துக்)கூறினான்; எனலோடும் -
அப்படிக் கூறிக்கொண்டிருந்த அளவில்....

     ‘போது’ என்பது காலம் என்னும் பொருள் உடையது ஆயினும் இங்கே
‘குடபால் சென்றது’ எனவருவதனை நோக்கிக் காலக் கடவுளாகிய
சூரியனைக் குறித்தாகக் கொள்க.  மாலை நேரம் வரவும்சித்திரகூடமாலை
கண்னுக்குத் தோன்றியது. அதைக் கண்டு காட்டிக் கூறிக்கொண்டிருந்தபோது
பரத்துவாச முனி எதிர்ப்பட்டான் என மேல் முடியும்.                 19