2020.செந் தழல் புரி செல்வன்;
     திசைமுக முனி செவ்வே
தந்தன உயில் எல்லாம்
     தன் உயிர் என நல்கும்
அந்தணன்; ‘உலகு ஏழும்
     அமை’ எனின், அமரேசன்
உந்தியின் உதவாமே,
     உதவிடு தொழில் வல்லான்.

     செந்தழல்புரி செல்வன்- செந்நிறமுள்ள முத்தீயை வளர்த்தலையே
செல்வமாகஉடையவன்;  திசை முக முனி - பிரமதேவன்; செவ்வே
தந்தன உயிர் எல்லாம் -
நேர்மையுறப் படைத்த உயிர்களை எல்லாம்;
தன் உயிர் என நல்கும் அந்தணன் - தன்உயிரைப்போலப்
பாதுகாக்கின்றஅந்தணன்; ‘உலகு ஏழும் அமை’ எனின் -
ஏழுலகங்களையும்  படைக்க என்றாலும; அமரேசன் -தேவ தேவனாகிய
திருமால்; உந்தியின் உதவாமே - தனது திருநாபிக்கமலத்தின்மூலமாகப்
படைக்க வேண்டாதபடி;  உதவிடு - தனது சங்கற்பத்தாலேயேபடைக்கும்;
தொழில் வல்லான் - தொழிலில் வல்லவன்.

     பரத்துவாச முனிவனது  அருளாற்றலும் தவ ஆற்றலும் கூறியவாறு.
எவ்வுயிர்க்கும் செந்தண்மைபூணுதலே அந்தணர் இயல் என்ற குறளினைக்
கம்பர் நினைவுக்கூர்கிறார்.                                   22