முனிவன், இராமன் வனம் வந்த காரணம் வினாவல் 2021. | அம் முனி வரலோடும், அழகனும், அலர் தூவி மும் முறை தொழுதான்; அம் முதல்வனும், எதிர்புல்லி, ‘இம் முறை உருவோ நான் காண்குவது?” என உள்ளம் விம்மினன்; இழி கண்ணீர் விழி வழி உக நின்றான் |
அம் முனி வரலோடும் - அத்தகைய பரத்துவாச முனிவன் வந்த அளவில்; அழகனும் -இராமனும்; அலர் தூவி - மலர்களைத் தூவி; மும்முறை தொழுதான் - மூன்று முறைவணங்கினான்; அம் முதல்வனும்- அந்தப் பெரியோனாகிய பரத்துவாசனும்; எதிர்புல்லி - எதிரே தழுவி; இம்முறை உருவோ நான் காண்குவது என- இப்படிப்பட்டவேடத்தொடு கூடிய வடிவத்தையோ என் கண்ணால் காணும்படியானது என்று; உள்ளம் விம்மினன் -மனம் பொருமினனாய்; இழி கண்ணீர் விழி வழி உக நின்றான் - கீழ்நோக்கிஇறங்கும் கண்ணீர் கண்களின் வழிவந்து கீழே சிந்தும்படி நின்றான். அரச குமாரனின் தவக் கோலத்தைக் கண்டானாதலின் ‘இம்முறை உருவோ நான் காண்பது’ என்றுஇரங்கினான். 23 |