2022. | ‘அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை; அது தீர, புகல் இடம் எமது ஆகும் புரையிடை, இது நாளில், தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் - இகல் அடு சிலை வீர! - இளையவனொடும்?’ என்றான். |
‘இகல் அடு சிலை வீர! - பகையை அழிக்கின்ற வில்லை ஏந்திய வீரனாகியஇராமனே!; அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை- பரந்த இவ்வுலகம் முழுமையும் நீண்ட காலம்ஆளக்கூடிய தகுதியை உடையாய்; அது தீர - அத்தன்மை நீங்க; இது நாளில் -இப்போது; புகல் இடம் எமது ஆகும் புரை இடை - எம்போன்ற தவமுனிவர்கள் தங்கிவாழும் இடமாகிய குகைகள் உள்ள வனத்திடத்து; தகவு இல தவ வேடம் - உன் தன்மைக்குப்பொருந்தாத தவத்தோர் வேடத்தை; இளையவனொடும் - இலக்குவனோடும்; தழுவினை -மேற்கொண்டவனாய்; வருவான் என்? ‘என்றான் - வருவதற்கு என்ன காரணம்’ என்றுவினவினான். அரச குமாரனாகிய இராமனுக்கு மரவுரியும் சடைமுடியும் ஆகிய தவக்கோலம் பொருந்தாது என்றுகருதி. ‘தகவு இல தவ வேடம்’ என்றார் என்பதாம். புரை - குகை. முனிவர்கள் குகைகளில் தங்கிவாழ்தல் பழக்கம். அவை உள்ள இடம் காடு ஆகும். 24 |