இராமன் பதில் உரைத்தலும் முனிவன் அது கேட்டு வருந்தலும் 2023. | உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரைசெய்தான்; நல் தவ முனி, ‘அந்தோ! விதி தரு நவை!’ என்பான், ‘இற்றது செயல் உண்டோ இனி?’ என, இடர் கொண்டான், ‘பெற்றிலள் தவம், அந்தோ! பெரு நிலமகள்’ என்றான். |
உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை செய்தான் - நடந்து முடிந்த செய்திகள்எல்லாவற்றையும் நன்கு புரிந்துகொள்ளும்படி முனிவனுக்கு இராமன் பதில் கூறினான் (அதுகேட்ட); நல் தவ முனி- நல்ல தவசியாகிய பரத்துவாசனும்; ‘அந்தோ! விதிதரும் நவை என்பான் - ஐயகோ! விதி தந்த துன்பம்’ என்பானாய்; ‘இனி - இக்காலத்திலும்; இற்றது செயல் உண்டோ - இப்படிப்பட்ட செயல் நிகழுமா; ‘என - என்று; இடர்கொண்டான் - மிக்க துன்பம் கொண்டு; ‘பெரு நிலமகள் - பெரிய பூதேவியானவள்; தவம் பெற்று இலள் அந்தோ! ‘என்றான் - உன்னைப் பெறுதற்குத் தவம் செய்து இருந்தும்உன்னால் ஆளப்படுதற்கு அத்தவம் இல்லாதவள் ஆனாள் ஐயோ!’ என்றான். ‘விதி தரும்நவை’ என்றது நடந்த நிகழ்ச்சிகளின் தவறு தசரதன். கைகேயி மாட்டுஅன்று. விதியால் விளைந்தது என்றவாறாம். முன்னர் ‘மைந்த! விதியின் பிழை’ என்றுஇலக்குவனுக்கு இராமன் கூறியதனை (1734) இங்குக் கருதுக. அரசுக்செல்வத்தை நீத்துத் தவக்கோலம் கொண்டு வனம் புகுந்த இராமன் செயலில் வியப்பினைத்தெரிவித்தது ‘இற்றது செயல் உண்டோ’ என்பது. இராமன் வனம் புகுந்ததால் உலகுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது. ‘பெற்றிலள் தவம் பெருநிலமகள்’ என்பது, ‘பெற்றிலள்’ என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு ‘தவம் செய்தாள் இல்லை’ என்று உரைப்பினும் அமையும். 25 |