முனிவனது ஆசிரமத்திற்கு இராமன் முதலியோர் செல்லுதல்  

2025.‘அல்லலும் உள’ இன்பம்
     அணுகலும் உள அன்றோ?
நல்லவும் உள; செய்யும்
     நவைகளும் உள; அந்தோ!
இல்லை ஒர் பயன் நான்
     இன்று இடர் உறும் இதின்’ என்னா,
புல்லினன், உடனே கொண்டு
     இனிது உறை புரை புக்கான்.

     ‘அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ? - துன்பமும்
இன்பமும் வாழ்க்கையில் மாறி மாறி வந்து சேருதல் உண்டு அல்லவா?;
நல்லவும் உள செய்யும் நவைகளும்உள;  அந்தோ! - நாம்செய்யும்
நல்வினைகளும்  உள்ளன;  தீவினைகளும்  உள்ளன.  ஐயோ!(அவற்றின்
பயனே இன்ப துன்பங்கள்) ஆகவே; நான் இன்று இடர் உறும் இதின்
ஓர் பயன்இல்லை -
நான் இன்று துன்பப்படுகின்ற இதனால் ஒரு பயனும்
இல்லை;’  என்னா - என்றுமுனிவன் கூறி;  புல்லினன் - இராமனைத்
தழுவியவனாய்;  உடனே கொண்டு - சேரஅழைத்துக் கொண்டு;  இனிது
உறை புரை புக்கான் -
தான் இனிதாகத் தங்கி யுள்ளதாகிய தவச்சாலையிற்
புகுந்தான்.

     அவரவர் செய்யும் நல்வினை தீவினைகளுக்கேற்ப விதிவழி இன்ப
துன்பங்கள் விளையும். ஆதலின், இராமா! நீ வனம் புகுந்தது கருதி நான்
வருந்துவதில் பயன் ஏதும் இல்லை என்றுபரத்துவாசன் கூறினான்.      27