முனிவன் தன்னுடன் தங்கியிருக்குமாறு  இராமனை வேண்டுதல்

2027.வைகினர் கதிர் நாறும்
     அளவையின் மறையோனும்,
‘உய்குவெம் இவனோடு யாம்
     உடன் உறைதலின்’ என்பான்,
செய்தனன் இனிது எல்லாம்;
     செல்வனை முகம் முன்னா,
‘கொய் குல மலர் மார்ப!
     கூறுவது உளது’ என்றான்;

     வைகினர் - (மூவரும்) தங்கினர்;  கதிர் நாறும் அளவையின் -
சூரியன்தோன்றும் வைகறைப் போதின்கண்;  மறையோனும் - பரத்துவாச
முனிவனும்;  ‘இவனோடுயாம் உடன் உறைதலின் உய்குவெம்’
என்பான் -
‘இவ் இராமனோடு யாம் சேரத் தங்கப்பெறுதலின் நற்கதி
பெறுவோம்’ என்று கருதுபவனாய்;  எல்லாம் இனிது  செய்தனன் -
இராமனுக்கு வேண்டுவ எல்லாம் இனிமையாகச் செய்து; செல்வனை முகம்
முன்னா -
இராமனைமுகம் நோக்கி; ‘கொய் குல மலர் மார்ப! - கொய்த
கூட்டமான மலர்களை அணிந்தமார்பினை உடையாய்!; கூறுவது உளது’ -
(உன்னிடத்தில்) யான் கூற வேண்டுவது  உளது;  என்றான் -.

     முன்னுதல் - கருதுதல் என்னும் பொருள் பெறும்.  இங்க ‘நோக்கி’
என்றதாம்.                                                    29